கொடநாட்டில் கொலை-கொள்ளை முன்னாள் அமைச்சர்- அரசியல் பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை

கொடநாட்டில் நடந்த கொலை-கொள்ளை வழக்கில், குற்றவாளிகளின் மொபைல் போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில்,முன்னாள் அமைச்சர் ஒருவரும் பல முக்கிய அரசியல் புள்ளிகளும் விசாரணை வளையத்துக்குள் வர உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொடநாட்டில் கொலை-கொள்ளை முன்னாள் அமைச்சர்- அரசியல் பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 24-ந்தேதி கொலை- கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த மர்ம கும்பல் நிறைய ஆவணங்கள் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றது.

போலீசார் நடத்திய விசாரணையில் 11 பேர் கும்பல் இந்த கொலை- கொள்ளையை செய்திருப்பது தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் கடந்த 28-ந்தேதி சேலம் அருகே நடந்த விபத்தில் பலியானார்.

அவரை தவிர மற்ற 9 பேர் போலீசாரிடம் சிக்கி விட்டனர். அவர்களில் மற்றொரு முக்கிய குற்றவாளியான சயன் என்பவன் விபத்தில் காயம் அடைந்ததால் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை மூலம் கொடநாடு எஸ்டேட் கொலை - கொள்ளையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

கேரளாவில் பிடிபட்ட ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரித் தனர். அப்போது அவர்களது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, முன்னாள் அமைச்சர் ஒருவர் இவர்களிடம் பேசியது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், முன்னாள் அமைச்சரிடம் செல் போனில் தொடர்பு கொண்டு பேசியது ஏன் என்று கேட்டனர்.கொடநாடு பங்களாவில் ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் ஆரம்பத்தில் பர்னிச்சர் வேலைகளை செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் அந்த முன்னாள் அமைச்சரின் சிபாரிசின் பேரில் கொடநாடு பங்களாவில் வேலை பார்த்தனர்.

அந்த சமயத்தில் பங்களாவில் உள்ள அறைகள், வழிகள் குறித்து இருவரும் நன்கு அறிந்து கொண்டனர். கொடநாடு காவலாளியை கொன்று கொள்ளை அடிப்பதற்கு முன்பு இரவில் இந்த கும்பல் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு சென்று டீ குடித்து உள்ளனர்.

கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்து கொள்ளையடித்த பிறகு 11 பேர் கும்பல் காரில் தப்பி சென்றுள்ளனர். அப்போது வயநாடு செல்லும் வழியில் கூடலூர் சோதனை சாவடியில் கும்பல் சென்ற காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்தனர். இதில் காரின் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் மாட்டி கொண்டனர்.அந்த சமயத்தில் ஜதீன்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர், எங்களுக்கு முன்னாள் அமைச்சரை தெரியும் என்றும் அவரது செல்போனில் பேசி உள்ளனர்.

அப்போது போனில் பேசிய முன்னாள் அமைச்சரும், போலீசாரிடம், இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான், காரை விடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.இந்த தகவல் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பழக்கம் காரணமாக கொடநாடு கொலை குறித்து எதுவும் அறியாத நிலையில் இவர்களுக்கு உதவி செய்தாரா? அல்லது வேறெதுவும் பின்னணி இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.ஜிதின்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரை கொடநாடு பங்களாவுக்கு இன்று தனிப் படை போலீசார் அழைத்து சென்று விசாரிக்கிறார்கள்.

இதற்கிடையே கொடநாடு கொலை சம்பவத்துக்கு முன்பு கனகராஜ், மற்றும் சயனின் செல்போனில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிலர் பேசியதாக தெரிகிறது. இந்த தகவலை மனோஜ், தனிப்படை போலீசாரிடம் தெரிவித்தார்.இதைதொடர்ந்து கனக ராஜ், சயனின் செல்போன் எண்களை வைத்து அவர் களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்? என்று சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கனகராஜ், சயனின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினால் குற்றவாளிகளின் எண்ணிக்கை கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் மட்டு மல்லாமல் கோவை, திருப்பூர், சேலம், சென்னை ஆகிய பகுதிகளை சேர்ந்த சில முக்கிய நபர்களின் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் உள்ள சில முக்கிய நபர் களை யும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சயனிடம் நேற்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு முரளி ரம்பா நேரில் விசாரித்தார்.
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்தது என்னென்ன? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் சயனிடம் கேட்ட போது அதுபற்றி எனக்கு தெரியாது, என மழுப்பலாக கூறி உள்ளார். ஆனால் அடுத்தடுத்து போலீசார் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு சயன் பதில் அளிக்க முடியாமல் திணறி உள்ளார்.

இதையடுத்து கனகராஜூடனான தொடர்பு குறித்தும், கொள்ளையில் ஈடுபட்ட வர்கள் பற்றியும், இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்றும் அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசார ணையில் பல்வேறு தகவல் களை சயன் கூறியதாக தெரி கிறது.
இதனடிப்படையில் அடுத்தக்கட்டமாக மேலும் பலரை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வாளையாறு பகுதியில் கைதான, மனோஜ் என்ற சாமியாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. நீலகிரி எஸ்.பி., தலைமையிலான போலீசார், கோவை, மதுக்கரை, வாளையாறு, சேலம், பகுதிகளில் விசாரணை நடத்த வருகின்றனர். 'விக்ரமாதித்தன் கதை' போல நீளும் இந்த வழக்கு குறித்து,

மனோஜிடம் நடந்த விசாரணையில், கனகராஜ், சயான் குறித்த தகவல்கள் மட்டுமே போலீசாருக்கு அதிகளவில் கிடைத்துள்ளன. கனகராஜ், சயான் ஆகியோரின் மொபைல் போன் எண்களை வைத்து, 'சைபர்கிரைம்' போலீசார், அவர்களுடன் தொடர்புடைய, நபர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க துவங்கி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமல்லாமல், கோவை, திருப்பூர், சேலம், சென்னை ஆகியவற்றில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நபர்கள் இவர்களிடம் பேசிய தகவல்கள் குறித்து இன்னும் சேகரிக்க முடியவில்லை.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சயன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் பல கேள்விகளுக்கு விடை பெற முடியவில்லை. உடல் நிலை தேறியதும் அவரை கைது செய்து விசாரிக்கும் போது இச்சம்பவத் தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தெரிய வரும். அதனடிப்ப டையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை அவர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்பபடையில் கோவை மதுக்கரையில் உள்ள அவரது மாமனார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு எந்த ஆவணங்களோ, பொருட்களோ கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com