

தூத்துக்குடி,
கோவில்பட்டி பகுதியில் வீட்டின் முன் நின்றிருந்த 16 வயது சிறுவனை பைக்கில் கடத்திச் சென்று பணம் கேட்டுத் தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், அச்சிறுவனை மிரட்டி வலுக்கட்டாயமாகத் தங்களது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளது. தொடர்ந்து அச்சிறுவனிடம் பணம் கேட்டுத் தாக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சிறுவனுக்கு அக்கும்பல் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுவன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி காமராஜா் நகரை சோ்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (வயது 21), சாஸ்திரி நகரைச் சோ்ந்த கொம்பையா மகன் மாடசாமி(21), மணிகண்டன் மகன் சூா்யா(19), காளிபாண்டி மகன் ஆனந்த்(20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.