கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

மதுரையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர்,ராதை வேடமிட்டு சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Published on

மதுரையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர்,ராதை வேடமிட்டு சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கள்ளழகர் கோவில்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலின் மூலவர் சன்னதிக்கு செல்லும் இடது புறத்தில் உள்ள கிருஷ்ணர் சன்னதியில் இந்த விழா நடந்தது. இதையொட்டி கிருஷ்ணர், தேவியர்களுக்கு, மஞ்சள், இளநீர், தேன், பழ வகைகள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மேலும் முன்னதாக மூலவர் சுந்தர ராச பெருமாள் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதனகோபாலசாமி கோவில்

மதுரை மேலமாசி வீதி மதன கோபால சாமி கோவிலில் ஆவணி பெருந்திருவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. நேற்று ஸ்ரீதேவி பூதேவியருடன் மதனகோபாலசாமி சப்பரத்தில் எழுந்தருளி கூடலழகர் பெருமாள் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடலழகர் பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சந்தான கிருஷ்ணர் சன்னதியில் சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கோவில் ஆடி வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொங்கல் வைத்து வழிபாடு

இதைபோல் பந்தடி 5-வது தெரு நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தல்லாகுளம் நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. நவநீதகிருஷ்ணன் நீலவண்ணத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் முன்பு ஏராளமான பெண்கள் மண் கலயத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

அதேபோல் திருப்பாலை கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ராதே கிருஷ்ணர், வடக்கு மாசி வீதி நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உத்தங்குடி ஆதி கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து மாலையில் ஏராளமான சிறுவர், சிறுமியர் ராதே கிருஷ்ணர் வேடமிட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து உறியடித்திருவிழா நடைபெற்றது.

இஸ்கான் கோவில்

மதுரை மணி நகரத்தில் உள்ள இஸ்கான் ராதா மதுராபதி கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளும், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகளும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இந்த விழாவை இஸ்கான் தென் தமிழக மண்ட செயலாளர் சங்கதாரி பிரபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராதா மதுராபதிக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு மகா ஆரத்தி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

பேரையூர்

பேரையூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தெற்கு தெரு யாதவர் இளைஞர்கள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு வீதி உலா வந்தனர்.வேடமிட்ட குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான் நவநீத கிருஷ்ணானந்தா பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்திருந்தனர். பெண்கள் கோலாட்டம் ஆடினார்கள். உறியடி திருவிழாவும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com