

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாகக் கூறி 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 75-க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த இளவரசு (38) தலைமையில் நேற்று 75-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், கடந்த 2009-ஆம் ஆண்டு ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு ஓசூர் தர்கா பகுதியைச் சேர்ந்த இளவரசு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்திக், இளவரசுவை தொடர்புகொண்டு, தாம் தனியார் நிறுவன நிர்வாகக் குழுவில் இருப்பதாகவும், அந்த நிறுவனம் விவசாயத் துறையில் புரட்சி செய்யும் வகையில் “விதை முதல் விற்பனை” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அவர்கள் செலுத்தும் தொகைக்கு மூன்று மடங்கு லாபம் வழங்கப்படுவதுடன், மாதந்தோறும் வருமானமும் கிடைக்கும் என ஆசைவார்த்தைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக தமிழ் இலக்கியன் என்பவரை அறிமுகப்படுத்தி, மத்திய அரசின் சான்றிதழ்களையும் காட்டி நம்பிக்கை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் ரூ.1,000 முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். மேலும், எம்எல்எம் முறையில் புதிய உறுப்பினர்களை சேர்த்தால் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் சிறு தொகைகளை லாபமாக வழங்கி நம்பிக்கை ஏற்படுத்திய நிறுவனம், பின்னர் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததும், கார்த்திக் உள்பட 3 பேர் தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளதாகவும், தற்போது புகார் அளித்துள்ள 75 பேரிடமிருந்து மட்டும் ரூ.6.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.