

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பள்ளி வகுப்பு முடிந்து வீடு திரும்பிய 7-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், அடையாளம் தெரியாத நபரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற நிலையில் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய். இவர் அங்குள்ள அதியமான் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறான். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகள் முடிந்த பிறகு, சஞ்சய் வழக்கம்போல வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார்.
அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சஞ்சய் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் லிப்ட் கேட்டு சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
பைக்கில் அழைத்துச் சென்ற நபர் யார், மாணவன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.