

கிருஷ்ணகிரி,
கேரளம் மாநிலம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் அவரது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்று கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆனது.
பழுது நீக்கப்பட்டு காரில் சென்று கொண்டிருந்த போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி காரின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில், காரில் பயணித்த வணிக கப்பல் ஊழியரான தீபக் (28), மற்றும் அவரது சகோதரி திவ்யா(30) ஆகிய இருவரும் பலியாகினர்.
மேலும் ரவிந்திரன் (57), ஸ்ரீ பார்வதி (54), வினித் (42), சரோஜினி (65), அபிந்தேவ் (11), அகில்தேவ் (8), ரம்யா (30) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.