

கும்பகோணத்தில், ரெயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது ரெயில்வே போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கே.எஸ்.அழகிரி போராட்டம்
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி உத்தரவிட்டது. இதுகுறித்த தகவல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் கும்பகோணத்தில் இருந்தபடி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தினார்.
பேச்சுவார்த்தை
மேலும் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்த திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் வந்த மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், நகர தலைவர் மிர்சாவுதீன், உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
2 பிரிவுகளில் வழக்கு
இந்த நிலையில் கும்பகோணம் ரெல்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், கே.எஸ்.அழகிரி உள்பட 4 பேர் மீது அனுமதியின்றி கூட்டம் திரட்டியது, ரெயிலை மறித்தது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.