

சென்னை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைமையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் போராட்டம் நடைபெற்றது. 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்த கையெழுத்து இயக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்று, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எச்.வசந்தகுமார் எம்.பி., ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். இந்த சந்திப்பின்போது ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், வில்சன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்களும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆதரவு அளித்தனர் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு உள்ளார்கள் என்றும் மு.க.ஸ்டாலினிடம், கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்களை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் மூலம் ஜனாதிபதியிடம் எப்போது சமர்ப்பிப்பது? என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.
விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணியை மேலும் பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்துரையாடினர். மேலும் அரசியல் நிலவரம் குறித்தும் பல்வேறு விஷயங்களை ஆலோசித்தனர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.