மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துகளை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துகளை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துகளை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்னார்குடி ஜீயர், மகாத்மா காந்தியும், கோட்சேவும் தேசப்பற்றுள்ளவர்கள்; தேசப்பற்றின் காரணமாகத் தான் மகாத்மா காந்தியை கோட்சே கொன்றார் என்று சொல்லி உள்ளார். ஜீயரின் கருத்து என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

இதுவரை இந்திய அரசியலில் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங்கம், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் கூட மகாத்மா காந்தியையும், கோட்சேவையும் ஒன்றுபடுத்தியது கிடையாது. காந்தியின் கொலையை நியாயப்படுத்தியது கிடையாது. ஆனால் ஜீயர் இதனை நியாயப்படுத்தி இருக்கிறார்.

ஜீயரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், மகாபாரதத்தில் வருகிற தர்மரும், துரியோதனும் ஒன்றா? ஸ்ரீ கிருஷ்ணரும், சிசுபாலனும் ஒன்றா? ராமரும், ராவணனும் ஒன்றா? ஸ்ரீ கிருஷ்ணரும், நரகாசுரனும் ஒன்றா? இந்த கேள்விகளுக்கு ஜீயர் பதில் சொன்னால் மகாத்மா காந்தியும், கோட்சேவும் ஒன்று என்ற கருத்து எவ்வளவு தவறானது என்பதை அவரே புரிந்து கொள்வார்.

இந்து மதத்தின் சிறப்பே சகிப்புத் தன்மை தான். அதற்கு மாறாக ஜீயர் போன்றவர்கள் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற கருத்துக்களை கூறி சமூக அமைதியை சிதைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தியதற்காக ஸ்ரீ கிருஷ்ணபிரான் ஜீயருக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com