ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடந்தது.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களுக்கான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு ஏகாம்பரேஸ்வரர் கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தை ஒட்டி மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது. சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது குபேர ஹோமமும் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் சேரும், செல்வாக்கு உயரும் என்பதும், தொடர்ந்து 3 முறை குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். இதனால் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பச்சை குங்குமம் மற்றும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com