குலசை தசரா: சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை - கோட்டாட்சியர் உத்தரவு

சினிமா பிரபலங்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசை தசரா: சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை - கோட்டாட்சியர் உத்தரவு
Published on

தூத்துக்குடி,

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் திருநாளான 20-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி, துளசிமாலை வாங்கி, கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில்களில் பிறை அமைத்து தங்கியிருந்து வழிபடுகின்றனர்.

இந்நிலையில், குலசை தசரா திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் குலசை தசரா திருவிழாவின்போது சினிமா பிரபலங்களை அழைத்து வந்து நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் இந்த முறை சினிமா பிரபலங்களை அழைத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், மீறி அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல், குலசை தசரா திருவிழாவிற்கு உலோகத்தால் ஆன ஆயுதங்களை கொண்டு வர தடை விதிக்கப்படுவதாகவும், திருவிழாவில் பக்தர்கள் தங்கள் சாதி அடையாளங்களுடன் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com