குலசை தசரா திருவிழா களை கட்டியது: காளி வேடமணிந்து ஆக்ரோஷமாக ஆடி வந்த பக்தர்கள்


குலசை  தசரா திருவிழா களை கட்டியது: காளி வேடமணிந்து  ஆக்ரோஷமாக ஆடி வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 30 Sept 2025 7:49 AM IST (Updated: 30 Sept 2025 11:10 AM IST)
t-max-icont-min-icon

காளி வேடமணிந்த பக்தர்கள் தெருக்களில் மேளதாளத்துடன் ஆக்ரோஷமாக நடனமாடி வந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 6-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை முதலே தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டினர். இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் 7-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) கமல வாகனத்தில் கசலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்த நிலையில் காப்புக்கட்டிய தசரா குழுவினர் நேற்று முதல் காளி, முருகன், சிவன், குறவன்-குறத்தி உள்பட பல்வேறு வேடமணிந்து ஊர் ஊராக செல்ல தொடங்கினர்.

குறிப்பாக உடன்குடி, சிவலூர், தாண்டவன்காடு, ஞானியார் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு தசராக்குழுக்களாக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். காளி வேடமணிந்த பக்தர்கள் தெருக்களில் மேளதாளத்துடன் ஆக்ரோஷமாக நடனமாடி வந்தது பொதுமக்களை பரவசப்படுத்தியது. சிறுவர்-சிறுமிகளும் சாமி வேடமணிந்து வீதி உலா வந்து காணிக்கை வசூலித்தனர்.

1 More update

Next Story