குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ; சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 6-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. வேடமணியும் தசாரா குழுவினர் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக்கொண்டனர். இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். இன்று முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடமணிந்து ஊர் ஊராக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.






