குலசை தசரா திருவிழா: துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

விரதம் இருக்கும் பக்தர்களின் வலது கையில் காப்பு எனும் மஞ்சள் கயிற்றை பூசாரி கட்டி விட்டார்.
குலசை தசரா திருவிழா: துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
Published on: 

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வ ரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்களின் வலது கையில் காப்பு எனும் மஞ்சள் கயிற்றை பூசாரி கட்டி விட்டார்.

பல்வேறு ஊர்களில் இருந்தும் விரதமிருந்து கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் காப்பு அணிந்தனர். கோவிலுக்கு வந்த குருசாமிகள் மொத்தமாக காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊரில் விரதமிருக்கும் பக்தர்களுக்கு அணிவித்தனர். தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் காணிக்கை வசூலிக்க தொடங்கினர். இதுதவிர கடற்கரையில் குவிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடினர். பின்னர் தங்களது ஊரில் உள்ள தசரா பிறையில் தெளித்து வழிபடுவதற்காக குடத்தில் கடலில் இருந்து புனிதநீரை எடுத்து சென்றனர்.

திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, மதியம், இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் அம்மன் வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com