குலசை தசரா திருவிழா: விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
குலசை தசரா திருவிழா: விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
Published on: 

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு ஊர்களில் இருந்தும் விரதமிருந்து கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள் காப்பு அணிந்தனர். நேர்த்திக் கடனாக பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் காணிக்கை வசூலிக்க தொடங்கினர்.

12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். முதல் நாள் திருவிழான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் ராகு தோஷம் நீங்கி பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரண்டாம் திருநாளான நேற்று காலை 7.30 மணி, காலை 9, 10.30, மதியம் 12 மற்றும் 1.30 மணி, மாலை 3, 4.30 மற் றும் 6 மணி, இரவு 7.30 ஆகிய நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோலத்தில் அம் மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

3-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com