குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் உலோக வேல், சூலாயுதம் கொண்டு வர காவல்துறை தடை

தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 2.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 3.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்.
இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு 23.9.2025 அன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு மற்றும் காப்புகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பின்வருமாறு:
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீதியான பனியன் மற்றும் உடைகளை அணிந்து வரவோ, ஜாதி தலைவர்கள் போன்று வேடமிட்டு வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டோ வரக்கூடாது.
உலோகத்திலான வேல், சூலாயுதம், வாள் போன்ற ஆயுதங்கள் கொண்டு வருதல் கூடாது.
தசரா திருவிழாவின்போது தசரா குழுவினர் பக்தி பாடல்களை தவிர சாதி ரீதியான பாடல்களோ, இசையோ இசைப்பதற்கு அனுமதி இல்லை. மேலும் அறுவறுக்க தக்க வகையில் நடந்து கொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலோ ஜாதி சம்பந்தமான கோஷங்கள் எழுப்பவோ இசை ஒலிக்கவோ கூடாது.
மேலும் ஏனைய பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் வரும் வழி, பக்தர்கள் வரும் வழி, கோவில் வளாகம், கடற்கரை பகுதி, பக்தர்கள் வெளியே செல்லும் வழி ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் காவலர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.






