குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சாதிக்கொடியுடன் வந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

குலசேகரன்பட்டினம் வரும் தசரா குழுக்கள் சார்பில் சாதி அடையாளங்களுடன்கூடிய பேட்ஜ், கொடி, டி-சர்ட், தொப்பி வைக்கக்கூடாது என்றும், இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சாதிக்கொடியுடன் வந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
Published on: 

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின்போது சாதிக்கொடிகளுடன் வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாதி அடையாளங்களுடன் கூடிய கொடி எடுத்து வந்தால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி அடையாளங்களுடன் கூடிய கொடி, டி-சர்ட், தொப்பி, பேனர் கொண்டுவரக் கூடாது என தடை விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த 5 பக்தர்கள் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வானுமாமலை மகன் இசக்கிபாண்டி (வயது 23), துரை(20), முத்துப்பாண்டி(33), கொம்பையா மகன் வானுமாமலை (47), பூமிநாதன் மகன் இருள்ராஜ்(40) ஆகிய 5 பக்தர்கள் நேற்று குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை மறித்தவாறு சாதிக்கொடியுடன் கோவிலை நோக்கிச் சென்றுள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை

இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ் அரவிந்த் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று, அந்த 5 பேரிடமிருந்த சாதிக்கொடியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் சாதி அடையாளங்களுடன் கூடிய டிஜிட்டல் போர்டு, பேட்ஜ், கொடி, டி-சர்ட், தொப்பி வைக்கக் கூடாது என்றும், இதை மீறும் தசரா குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com