

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 10-ம் தேதி காளி பூஜையும், 11-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.
பக்தர்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், தீச்சட்டி ஏந்தி வரும் பக்தர்களுக்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கோவில் வளாகப் பகுதி, தற்காலிக பேருந்து நிலையங்கள், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி மற்றும் பக்தர்களுக்கான கூட்ட நெரிசல் மேலாண்மை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டுப் ஆய்வு செய்த டி.ஐ.ஜி., பணிகளை தடையின்றி மேற்கொள்வது குறித்து துறை சார்ந்த போலீசாருக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், ஏ.டி.எஸ்.பி. சகாயஜோஷ், திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முகேஷ் அரவிந்த், வேல்முருகன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.