

சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து மட்டுமே தற்போது ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு வருகின்றன. அதிக எடையை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக 3-வது ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சுமார் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவு இடத்தை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான பணிகளை பிரதமர் மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது இந்திய விண்வெளி உள்கட்டமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தளத்திற்கான அடித்தளப் பணிகள் மேல் ஒருங்கிணைப்பு வசதிகள், ஏவுதள சேவைக் கட்டிடம், தரைவழிச் சோதனைகள் மையம், டெலிமெட்ரி அமைப்புகள் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான தனியான ஏவுதளம் அமைக்கப்படுகிறது. ஒருங்கிணைப்புக் கட்டிடத்தின் கட்டுமானம் நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் பணிகளை முடிக்க இலக்கு வைத்திருந்த நிலையில், தற்போது 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் விண்வெளித் துறை அதிக நெரிசலாகவும், வணிகமயமாகவும் மாறிவரும் நிலையில், வேகமாக வளர்ந்து வரும் சிறிய செயற்கைக்கோள் புரட்சியில் இந்தியா போட்டித் தன்மையுடனும், கலாசார ரீதியாக சுறுசுறுப்பாகவும் இருப்பதை குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் இந்த வசதி உறுதி செய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். 'இந்தியாவின் 2-வது விண்வெளி ஏவுதளம் குலசேகரன்பட்டி னத்தில் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குள் தயாராகும்', என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.