குமாரபாளையம் நகராட்சி கூட்டம்

குமாரபாளையத்தில் நகராட்சி கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் நகராட்சி கூட்டம்
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி கூட்டம் நேற்று தலைவர் விஜய் கண்ணன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி பேசுகையில், தற்போது கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் கட்டுமான பணி தரமற்றதாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என்றார். அதற்கு தலைவர் தரமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

சுயேச்சை கவுன்சிலர் தீபா கூறுகையில், தினசரி மார்க்கெட் உள்புறத்தில் இருக்கும் கழிவறையை வெளிப்பகுதியில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு தலைவர் வெளிப்புறத்தில் அமைக்க முடியாது என்றும், சுகாதாரமாக பேணப்படும் என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் பழனிச்சாமி பேசுகையில், பொதுப்பணித்துறை வசம் உள்ள மக்கள் பயன்பாட்டில் இல்லாத நீர் வழி ஓடைகளை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை நகராட்சி வசம் எடுக்கப்படுமா? என கேட்டார். அதற்கு தலைவர் பொதுப்பணித்துறை வசமுள்ள பயன்பாட்டில் இல்லாத கண்மாய் ஓடை, நீர் வழி பாதைகளை பராமரிக்க வசதியாக நகராட்சி வசம் ஒப்படைக்குமாறு கோரலாம் என்றார்.

5-வது வார்டு கவுன்சிலர் சுமதி பேசுகையில், சின்னப்பநாயக்கன் பாளையம் அரசு பள்ளி அருகே குப்பை கிடங்கு உள்ளதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கிறது. அதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்றார். இதேபோல் தங்கள் பகுதியில் சாக்கடை அகற்றுவது, குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கவுன்சிலர்கள் எழுப்பினர். தொடர்ந்து 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com