குமரி அனந்தன் மறைவு - வைரமுத்து இரங்கல்

இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.
இந்த நிலையில் உயிரிழந்த குமரி அனந்தனுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, குமரி அனந்தன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது. அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி தமிழுக்காக ஒன்றிய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன். போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும். நடைப் பயணங்களால் நாடுசுற்றிய நாயகன் கண்மூடிக்கொண்டு கேட்டால் அவர்பேச்சு உரைநடைச் சங்கீதமாய் ஒலிக்கும் ஒரு தமிழாளன் தவறிவிட்டான். தளராத கொள்கையாளன் தவறிவிட்டான் என்று சோகம் கப்புகிறது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அனந்தன் என்றால் முடிவற்றவன் அனந்தனும் முடிவற்றவர்தான் தமிழிலும் புகழிலும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.






