

ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, பளுகல், ஈத்தாமொழி பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்ட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இன்றும் ஒகி புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே பரளியாறு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் விமல் என்கிற 27 வயது இளைஞர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பைங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்து ரத்தினசாமி என்பவர் உயிரிழந்தார் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது.
மீன்பிடிக்கச் சென்ற 99 மீனவர்கள், 24 படகுகள் மாயமானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட அவசர கால உதவி எண்கள் : 1077, 04652-231077, 94424 80028, 94450 08139.
அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
ஒகி புயல் பாதிப்பு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 3,750 மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. 11 துணைமின் நிலையங்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதம் அடைந்து உள்ளன. சீரமைக்கும் பணிகளில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.