குமரி: போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி - கணவன், மனைவி கைது

குமரியில் போலி நகைகளை அடமானம் வைத்து லட்ச கணக்கில் மோசடி செய்த கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர்.
குமரி: போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி - கணவன், மனைவி கைது
Published on

தக்கலை,

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது48). இவர் மார்தாண்டம் பகுதியை சேர்ந்த அனுஷா என்பவரை 2-வது திருமணம் செய்து செட்டிகுளத்தில் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் சொகுசு காரில் சென்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கவரிங் நகைகளை கொடுத்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தக்கலை அருகே சித்திரங்கோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் பெண் ஒருவர் 10 கிராம் எடையுள்ள ஒரு காப்பினை அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளார்.

சந்தேகம் அடைந்த பைனான்ஸ் கடை உரிமையாளர் நகையை சோதனை செய்து பார்த்த போது கவரிங் நகை என தெரிந்தது.மேலும் இவரது பைனான்ஸ் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பரிசோதனை செய்து பார்த்த போது, ரோட்டில் சொகுசு கார் வந்து நிற்பதும், ஒரு பெண் இறங்கி வந்து நகையை அடமானம் வைப்பதும் தெரிந்தது.

மேலும், காரின் எண்ணை குறிப்பிட்டு கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். உடனே போலீசார் உஷார் அடைந்து வேர்கிளம்பி மற்றும் மேக்காமண்டபம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வேர்கிளம்பி வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் ஜேசுராஜா மற்றும் அவரது மனைவியும் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தாங்கள் பல்வேறு இடங்களில் போலி நகை கொடுத்து ஏமாற்றி வந்தது ஒப்பு கொண்டனர்.

பின்னர் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இவர்களுக்கு ஒரே மாதிரியான காப்புகள் சப்ளை செய்பவர்கள் யார் எனவும், இவர்கள் இது போல் எங்கல்லாம் ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com