கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 17வது ஆண்டு நினைவு தினம் - பெற்றோர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 17வது ஆண்டு நினைவு தினம் பலியான குழந்தைகளின் படத்துக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 17வது ஆண்டு நினைவு தினம் - பெற்றோர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Published on

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். இதையடுத்து பலியான குழந்தைகளின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இந்த தீவிபத்து நடைபெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்து விட்டது. பலியான குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை கிருஷ்ணா பள்ளி முன்பு பெற்றோர்கள் கூடினர். அங்கு நேற்று இரவே 94 குழந்தைகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டது. இன்று குழந்தைகளின் படங்களுக்கு முன் அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு வகைகள், துணிகளை வைத்தும், மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்திகளை ஏற்றி குழந்தைகளின் படங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

முன்னதாக பலியான குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும், குடும்பத்தோடு காவிரியின் வடபுறமாக இருக்கும் பெருமாண்டி இடுகாட்டில் உள்ள குழந்தைகளின் சமாதிகளில் இறந்த குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு, பழம், பலகாரங்களை வைத்து வழிபட்டனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பூர் அன்னம்மாள் கல்லறையில் உள்ள சமாதியில் வழிபட்டனர்.

தொடர்ந்து காலை 9 மணியளவில் அந்தப் பள்ளியிலிருந்து பெற்றோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு காவிரியின் தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அகல் விளக்கு ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமகக் குளக்கரையில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர்.

பள்ளியின் முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு, உறவினர்கள், தீ விபத்தின்போது படித்த மாணவர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இந்த சோகத்திலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள். உயிர் பிழைத்த சில குழந்தைகள் தீக்காயத்தால் ஏற்பட்ட பாதிப்பால் வாழ்க்கையை இழந்து காணப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com