விவசாயிகள் மீது குண்டாஸ் - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

செய்யாறு சிப்காட்டிற்கு 55 தொழிற்சாலைகள் வரவுள்ளன.
விவசாயிகள் மீது குண்டாஸ் - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக, அப்பகுதியில் உள்ள 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

செய்யாறு சிப்காட்டிற்கு 55 தொழிற்சாலைகள் வரவுள்ளன. தொழிற்சாலை வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும்.பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டே சிப்காட் அமைக்கப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள். சிலரின் தூண்டுதலின் பேரில் தவறாக பரப்புரை செய்யப்படுகிறது.கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இருமடங்கு விலை வழங்கப்படுகிறது.

யாரோ துண்டுதலின்பேரில் போராட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து வந்து இங்கு வந்து போராட்டம் நடத்துவது சரியா? நிலம் கையகபடுத்தாமல் தொழிற்சாலையை எங்கு அமைப்பது என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com