

சென்னை,
போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி காட்டுத்தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் 20 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடக்க எழுந்த சூழ்நிலைகள் பற்றியும், காப்புக்காடு பகுதிகளில் மலையேற்றம் செய்வதற்காக அனுமதி அளிக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் முறைகள் குறித்தும், மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மலையேற்ற விதிமுறைகளை மீறினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அதுல்யா மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய அவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை தொடங்கிய அதிகாரி அதுல்யா மிஸ்ரா, சம்பவ இடமான குரங்கணி மலைப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். விசாணையை துரிதமாக மேற்கொண்டுவரும் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா பேசுகையில், காட்டுத்தீ தொடர்பாக பொதுமக்கள் 32 பேரிடமும், அரசு அதிகாரிகள் 41 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, குரங்கணி காட்டுத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை 2 மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூறிஉள்ளார்.