தென்திருப்பேரை:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நேற்று விமரிசையாக கொண்டாப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொடைவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி நாளை அம்மன் கோவிலில் ஒன்றாகும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் என்று கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடைவிழாவுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஓலையால் செய்யப்பட்ட குடிலில் தங்கி இருந்தனர். நேற்று கொடைவிழாவை முன்னிட்டு அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
முளைப்பாரி ஊர்வலம்
பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மாலை 4 மணிக்கு பட்டிமன்றம், மாலை 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், மரத்திலான கை, கால்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து சிறப்பு வானவேடிக்கை நடந்தது.
கோவிலில் நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேங்காய், பழம் வைத்து அம்மனை வழிபட்டனர்.
நள்ளிரவில் நாராயணர், பாமா ருக்மணியுடன் குரங்கணி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெற்றது. கோவை வாழ் குரங்கணி இளைஞர்கள், நண்பர்கள் பத்தாவது ஆண்டாக அன்னதானம் வழங்கினர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சென்னை தட்சண மாற நாடார் சங்க பொருளாளர் எம்.ஜெகதீசன் முருகன், ஹார்டுவேர்ஸ் அதிபர் என்.ராஜேந்திரன், முத்துமாலை அம்மன் டிரான்ஸ்போர்ட் அதிபர் சந்திரசேகரன, கே.எம்.பி.ஹிட்ஸ் ஆர்.கேசவமூர்த்தி, சென்னை வாழ் நாடார் சங்கத்தை சேர்ந்த தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் எம்.ஜே.விஜய், செயலாளர் வி.ஜெய்சங்கர், துணைச் செயலாளர் முத்துக்குமார் ஆனந்த், பொருளாளர் சதீஷ்குமார், சத்யா ஸ்டோர் கார்த்திகேயன், வரலட்சுமி ஏஜென்சி அதிபர்கள் முன்னாள் நாடார் சங்க தலைவர் முத்து மாலை குமரன், டிரைபிஸ்கம்பெனிஅதிபர்கள் விஜய் கன்ஸ்டிரக்சன் ஜெயபிரகாஷ் மற்றும் கே.ஆர். சேம்பர் அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் சென்னை வாழ் நாடார் சங்கம், கோவை வாழ்நாடார் சங்கம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்