குரியன் ஜோசப் குழுவை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையல்ல என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.
 மு.வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

குரியன் ஜோசப் குழுவை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு

மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் கடந்த ஆட்சியில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி.வி.ராஜமன்னார் தலைமையில் 1969 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகான 50 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், மத்திய - மாநில உறவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைகள் மீது முறையாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் இந்திய ஆட்சிப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அலுவலர் முனைவர் கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் கல்வி புலத்திலும், அறிவுத் தளத்திலும் முத்திரை பதித்துள்ள பேராசிரியர் முனைவர் எம். நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் மட்டக் குழு தனது முதல் தொகுதி அறிக்கையை, கடந்த 2026 பிப்ரவரி 16 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக உயர் மட்டக் குழு, தனது இறுதி அறிக்கையை நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையல்ல என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.

அதிகார அத்துமீறல்

பொருளாதாரம், கல்வி, வேலை, விவசாயம், வேலை வாய்ப்பு, இயற்கை வளங்களை கையாளுதல் உட்பட அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து குவித்தும் வருகிறது. இது, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது, மாநில உரிமைகளை மறுத்து வரும் செயலாகும். கவர்னர்களை பயன்படுத்தி, மக்கள் தேர்வு செய்து அமைக்கப்பட்டுள்ள ஆட்சிக்கு எதிராக நடத்தி வரும் அதிகார அத்துமீறல்களை தமிழ்நாடு அரசும், மக்களும் கடந்த சில பத்தாண்டுகளாக அனுபவித்து உணர்ந்த உண்மையாகும்.

இந்நிலையில் மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த அவசியத் தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, அது தனது பணியை பூரணமாக முடித்து தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X