தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார் எல்.முருகன்

தான் எம்.எல்.ஏ.வாக உள்ள அவினாசி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் தனபால்.
தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றார் எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரியும் அவிநாசி சட்டமன்ற வேட்பாளருமான எல்.முருகன் நாளை, 6-4-2026 திங்கள் கிழமை அன்று அவிநாசி அப்பர் திருக்கோவில் அருகில் பெரிய தேர் திடலில் இருந்து, மத்திய நிலக்கரி துறை மந்திரி கிசான் ரெட்டி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன், ஊர்வலமாகச் சென்று அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மதியம் 12 மணிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றார்.

இந்தநிலையில், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலை அவரது இல்லத்தில் சந்தித்து அவினாசி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகன் ஆசி பெற்றார்.

இது குறித்து எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

2026 சட்டப்பேரவை தேர்தலில் அவினாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு, அதிமுக மூத்த தலைவர் மற்றும் அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்தவருமான மதிப்பிற்குரிய அண்ணன் தனபால் அவர்களைச் நேரில் சந்தித்து ஆசி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு. சேவூர் வேலுச்சாமி அவர்கள் உடனிருந்தார் என அதில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக மூத்த தலைவரான தனக்கு அதிமுகவில் சீட் தரவில்லை என்றும், அது பற்றி யாரும் தன்னிடம் பேசக்கூட இல்லை என்றும், உடல் நலமின்றி இருந்தபோது தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் சமீபத்தில் தனபால் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரை அதிமுகவினர் யாரும் பொருட்படுத்தாத நிலையில், இப்போது எல்.முருகன் நேரில் சென்று சந்தித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், தவெகவில் இணைந்த தனபால் மகன் லோகேஷ், ராசிபுரம் தொகுதியில் அந்த கட்சி சார்பில் தேர்தல் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com