மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாலிபரை ஏரியில் தள்ளி கொன்ற தொழிலாளி கைது

மனைவியுடன் கள்ள தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாலிபரை ஏரியில் தள்ளி கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாலிபரை ஏரியில் தள்ளி கொன்ற தொழிலாளி கைது
Published on

சென்னையை அடுத்த பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் விஜயகாந்த் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா. ரேணுகாவின் உறவினரான தர்மபுரியை சேர்ந்த ராஜீவ்காந்தி (32) என்பவர் வேலை இல்லாமல் இருந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார். இவர் ரேணுகாவின் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் ரேணுகா மற்றும் அவரது கணவர் விஜயகாந்த் அந்த பகுதியில் தேடி வந்த நிலையில் பெருங்குடி ஏரியில் ராஜீவ்காந்தி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ராஜீவ்காந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜீவ்காந்தியின் கழுத்தில் காயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் ரேணுகாவின் கணவர் விஜயகாந்திடம் விசாரணை செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. விஜயகாந்த் இதுகுறித்து போலீசாரிடம் கூறும்போது, 'தர்மபுரியில் திருமணமாகி வேலைக்கு செல்லாமல் சுற்றிய ராஜீவ்காந்தியை சென்னைக்கு அழைத்து வந்து தங்க வைத்தேன். சில நாட்கள் கட்டுமான வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி குடித்து விட்டு சுற்றினார். இந்த நிலையில் எனது மனைவியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது.

அடிக்கடி இது தொடர்பாக எனக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 16-ந்தேதி ராஜீவ்காந்தியை பெருங்குடி ஏரி அருகே அழைத்து சென்று அங்கு இருவரும் மது அருந்தினோம். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் ராஜீவ்காந்தி கழுத்தில் குத்தினேன். பின்னர் ஏரியில் தள்ளி விட்டு வந்து விட்டேன். பின்னர் மனைவியுடன் சேர்ந்து நானும் தேடுவது போல் நடித்தேன்' என போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து சந்தேக மரண வழக்கினை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் விஜயகாந்த்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com