

அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் செங்குட்டை காலணியை சேர்ந்தவர் ரவி (வயது 53). கூலித்தொழிலாளி. நேற்று காலையில் ரவி தன்னுடைய மகன் முத்தழகனுடன் அம்மாபேட்டை அருகே உள்ள ஓலையூர் புலேரிக்காடு பகுதியில் சாந்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்கு மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணிக்கு சென்றார்.
கிழங்குகளை வெட்டி எடுத்துக்கொண்டு இருக்கும்போது, திடீரென தோட்டத்துக்கு மேல் சென்ற மின்கம்பி அறுந்து ரவி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அதைப்பார்த்த முத்தழகனும் வேலை செய்து கொண்டு இருந்து மற்ற தொழிலாளர்களும் ஓடிச்சென்று ரவியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் குருவரெட்டியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் போலீசாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே மின் கம்பி அறுந்து விழுந்த இடத்தை குருவரெட்டியூர் மின்வாரிய உதவி பொறியாளர் மணிபிரகாஷ் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். வேலைக்கு சென்ற இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து மகன் கண்முன்னே கூலி தொழிலாளி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.