கடலூர் அருகே வாக்குச்சீட்டில் சின்னம் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம் - வேட்பாளர் வாக்குவாதம்

கடலூர் அருகே விலங்கல்பட்டு ஊராட்சியில் வாக்குச்சீட்டில் வேட்பாளர் சின்னம் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே வாக்குச்சீட்டில் சின்னம் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம் - வேட்பாளர் வாக்குவாதம்
Published on

கடலூர்,

கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் மோகனா உள்பட 4 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் சென்ற போது, வாக்குச்சீட்டில் சுயேச்சை வேட்பாளரான மோகனாவின் கார் சின்னம் இல்லை. இதனால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி அறிந்த மோகனா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கார் சின்னத்துடன் கூடிய வேறு வாக்குச்சீட்டு எடுத்து வரப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு உடனே வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னர் கார் சின்னத்துடன் கூடிய வேறு வாக்குச்சீட்டுகள் எடுத்து வரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த சம்பவத்தால் 2 மணிநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதனை ஊராட்சியில் முதனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகளும், விருத்தகிரிகுப்பம் அரசு பள்ளியில் 4 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகளில் ஒரு பக்கத்தில் சின்னம் அச்சிட்டும், மற்றொரு பக்கத்தில் உண்மை தன்மை சீலும் குத்தப்பட்டிருந்தன.

இந்த வாக்குச்சீட்டில் குத்தப்பட்ட சீல் மற்றொரு பக்கத்தில் இருந்த சின்னத்தின் மீது பதிவாகியிருந்தது. இது குறித்து அறிந்த வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் அவ்வாறு ஒரு பக்கத்தில் குத்தப்பட்ட சீல் மற்றொரு பக்கத்தில் சின்னத்தின் மீது பதிவாகியிருந்தால் வாக்குகள் செல்லாததாக மாறிவிடும் எனக்கூறி தேர்தலை நிறுத்தினர். இதுபற்றி அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பத்ரிநாத், தனித்துணை ஆட்சியர் பரிமளம், தாசில்தார் கவியரசு மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விரைந்து வந்து வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com