

அணைக்கட்டு தாலுகா அகரம் கிராமம் ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்த சிவானந்தம் மனைவி பரமேஸ்வரி (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பரமேஸ்வரி மீது வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் பரமேஸ்வரியை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை ஜெயிலில் இருக்கும் பரமேஸ்வரிடம் போலீசார் நேற்று வழங்கினர்.