கணவருடன், பெண் போலீஸ் உள்பட 6 பேர் கைது

காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் சாராயம், மது பாட்டில்கள் கடத்திய பெண் போலீஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கணவருடன், பெண் போலீஸ் உள்பட 6 பேர் கைது
Published on

காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் சாராயம், மது பாட்டில்கள் கடத்திய பெண் போலீஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தீவிர சோதனை

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. கிராம பகுதிகளில் சாராய விற்பனை கனஜோராக நடந்து வந்தது.

இதனை கண்காணித்து தடுக்க மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக சாதனை செய்து வருகின்றனர். வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது மதுக்கடத்தலில் ஈடுபட்ட பலரை கைது செய்து வருகின்றனர்.

காரில் சோதனை

இந்த நிலையில் காரைக்காலில் இருந்து காரில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நாகை நகர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

அப்போது அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடம் அருகே கார் ஒன்று நிற்பதை பார்த்து சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள்

அந்த காரில் பெண் போலீஸ் ஒருவர் உள்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரில் சோதனை செய்தபோது புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது. மேலும் சாராயமும் இருந்தது.

ரூ.5 லட்சம் மதிப்பு

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது நாகூர் அருகே கீழவாஞ்சூரை சேர்ந்த பெண் போலீஸ் ரூபிணி(வயது 32) என்பதும் அவர், திருவாரூர் மாவட்டம் வைப்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் கார் டிரைவர் பெண் போலீஸ் ரூபிணியின் கணவர் ஜெகதீஷ் (34) என்பதும், மற்றொருவர் நாகையை சேர்ந்த கோபிநாத்(38) என்பதும், இவர்கள் 3 பேரும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கணவருடன் பெண் போலீஸ் உள்பட 6 பேர் கைது

இதையடுத்து பெண் போலீஸ் ரூபிணி, அவரது கணவர் ஜெகதீஷ், கோபிநாத் ஆகிய 3 பேரையும் கையும், களவுமாகப் பிடித்த தனிப்படை போலீசார், கடத்தி வரப்பட்ட மதுபானம், சாராயத்தை வாங்க வந்ததாக தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்த ராஜசேகர்(24), மகாலிங்கம்(44) மகேஸ்வரி(34) ஆகிய 3 பேரையும் நாகை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நாகை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து பெண் போலீஸ் ரூபிணி, அவரது கணவர் ஜெகதீஷ் உள்பட 6 பேரையும் கைது செய்தார்.

பரபரப்பு

பின்னர் கைதான பெண் போலீஸ் ரூபிணி உள்பட 6 பேரையும் நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

நாகையில் சாராயம், மது பாட்டில்கள் கடத்தியதாக கணவருடன் பெண் போலீஸ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com