நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்

விவசாயத்தை அழித்து வளர்ச்சி தேவையில்லை என்றும், நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்றும் நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்
Published on

விருத்தாசலம்,

ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் நில அபகரிப்பை தடுத்தல், நிலக்கரி சுரங்க விரிவாக்கம் மற்றும் புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக கடலூர் மாவட்டத்தை அறிவிக்க செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி வரவேற்றார். தேசிய தென்னிந்திய நதிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, தமிழ்நாடு உழவர் கூட்டமைப்புகளின் தலைவர் தெய்வசிகாமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி, பசுமைத்தாயகம் மாநில செயலாளர் அருள், பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, ஏரி மற்றும் நீர்ப்பாசன சங்க தலைவர் விசுவநாதன், வர்த்தகர் சங்க மண்டல தலைவர் ஆர்.டி.சண்முகம், ஏ.ஐ.டி.யு.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர், மணிமுக்தாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்க.தனவேல், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபாலன், நிர்வாகி ரவீந்திரன், மாநில பொருளாளர் திலகர் மற்றும் விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், வணிகர் அமைப்புகள், இளையோர் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசினர். பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்திற்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், கடலூர் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், சண்.முத்துகிருஷ்ணன், கார்த்திகேயன், செல்வ மகேஷ், மாவட்ட தலைவர் நவீன் பிரதாப் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து என்.எல்.சி. நில எடுப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

முன்னதாக கூட்டத்துக்கு வருகை தந்த அனைவரையும் அவர்களது இருப்பிடத்திற்கு சென்று அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

வளர்ச்சி தேவையில்லை

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கோரிக்கை வைத்து வருகிறோம். அன்று எங்களுக்கு இவ்வளவு பாதிப்புகள் வரும் என்று புரியவில்லை.

இந்த நிலையில் 91 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்.எல்.சி. சுரங்க பகுதியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை பகுதி வரை எடுக்க உள்ளனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

விவசாயத்தை அழித்து எங்களுக்கு வளர்ச்சி தேவையில்லை.

ஒத்துழைப்பு

நாடாளுமன்றத்தில் என்.எல்.சி. தனியாரிடம் விற்கபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகம் தனியாரிடம் சென்றால் அவன் லாபத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவான்.

இப்படியே விவசாய நிலங்களை எடுத்துக் கொண்டு சென்றால் விரைவில் உணவு பற்றாக்குறை வரும். இதனை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம்.

இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் பல வழக்குகளை வாங்கியுள்ளனர். எனவே நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

91 ஆயிரம் ஏக்கர் நிலம்

தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் அனைவரும் சொல்கின்ற ஒரே கருத்து என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டத்திற்கு 66 ஆண்டு காலமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

என்.எல்.சி. நிர்வாகம் வருகின்ற காலங்களில் 91 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த உள்ளது. இதற்காக என்.எல்.சி. நிர்வாகம் ரூ.13 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

என்.எல்.சி. நிர்வாகத்திற்காக மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும், தமிழக அரசும் நிலத்தை கையகப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு பொய்யான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் உண்மையை மட்டும் பேசுங்கள். விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவோம் என்கிறார்கள். எப்படி பாதிப்பு இல்லாமல் கையகப்படுத்த முடியும்?. நிலம் கொடுத்த 1700 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என அமைச்சர் கூறுகிறார். என்ன வேலை என்றால் தனியாரிடம் கூலி வேலை. 299 பேரை என்ஜினீயர் வேலைக்கு எடுத்தார்கள். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இல்லை.

அச்சுறுத்தல்

2018-ம் ஆண்டில் 1200 பேரை வேலைக்கு என்.எல்.சி. நிர்வாகத்தில் எடுத்தார்கள். அதில் வெறும் 8 பேர் தான் தமிழர்கள் என்று இன்றைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது தெரிவித்தார். 2019-ம் ஆண்டில் தற்போது இந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடியவர் என்.எல்.சி.யை எதிர்த்து எதிர்க்கட்சியாக இருந்த போது கடுமையான போராட்டத்தை நடத்தினார். ஆனால் இப்படி நடந்து கொண்டவர்கள் இன்று என்.எல்.சி. நிர்வாகத்திற்கு முழு ஆதரவளித்து காவல்துறையினரை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

வீராணம் குடிநீர் கிடைக்குமா?

இந்த பிரச்சினை நிலத்தை கையகப்படுத்தக்கூடிய 10, 15 கிராமங்களுடைய பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த மாவட்ட பிரச்சினை, அது மட்டும் இன்றி அருகில் உள்ள அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களை சார்ந்த பிரச்சினையாகும்.

புதிய வீராணம் நிலக்கரி எடுப்பு திட்டம் எடுத்தால் சென்னையில் உள்ள மக்களுக்கு வீராணம் குடிநீர் கிடைக்குமா? இது வளர்ச்சிக்கான திட்டம் கிடையாது.

பா.ம.க.வின் பிரச்சினை கிடையாது

நாடாளுமன்றத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் விற்கப்போவதாக அறிவித்த பிறகு தமிழக அரசு ஏன் விவசாயிகளின் நிலத்தை பறித்து என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்?. கடையடைப்பு போராட்டத்தில் 100 விழுக்காடு வியாபாரிகள் தானாக வந்து கடைகளை அடைத்தார்கள். அதனால் அவர்களுடைய உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இது பா.ம.க.வின் பிரச்சினை கிடையாது. அன்புமணியின் பிரச்சினை கிடையாது. வாழ்வாதார பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினையாகும்.

தமிழ்நாட்டை அழிக்க விடமாட்டோம்

66 ஆண்டு காலமாக என்.எல்.சி. இயங்கிய காரணத்தினால் நுரையீரல், புற்றுநோய், வலிப்பு உள்ளிட்ட எல்லா நோய்களும் வந்து கொண்டிருக்கிறது. ரூ.2400 கோடி லாபமீட்டும் என்.எல்.சி.யின் முதலீடு தமிழ்நாட்டில் எதுவும் கிடையாது.

தமிழக முதல்-அமைச்சர் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுங்கள். நாங்கள் இந்த மாவட்டத்தையும், தமிழ்நாட்டையும் அழிக்க விடமாட்டோம். நாங்கள் போராட்டத்தை விட்டு பின்வாங்க மாட்டோம். நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களை அறிவிப்போம்.

போராட்டம் மிகவும் கடுமையாக...

எங்களது மண்ணையும் மக்களையும் விட்டு விடுங்கள் என நியாயமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் நாங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம். என்.எல்.சி.யின் தரகராக மாவட்ட கலெக்டர் செயல்பட்டு வருகிறார். அவரை தான் முதலில் மாற்றி இருக்க வேண்டும்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போராட்டக்குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் போராட ஒரு கூட்டு முயற்சியை ஏற்படுத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் போராட்டம் மிகவும் கடுமையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com