காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலம்

சேத்தியாத்தோப்பு அருகே காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலம்
Published on

சேத்தியாத்தோப்பு

குண்டும் குழியுமான சாலை

புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட எறும்பூரில் இருந்து சின்ன நற்குணம் பணஞ்சாலை வழியாக செல்லும் சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஒட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. பாலத்தின் பக்கவாட்டில் கைப்பிடி சுவர் எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

தவறி விழுந்து படுகாயம்

அதேபோல் இந்த சாலையில் தெரு மின் விளக்கு வசதிகள் கிடையாது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கைப்பிடி சுவர் இல்லாத தரைப்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனங்களுடன் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு இரவு நேரம் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தரைப்பாலத்தின் பக்கவாட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் மதுபோதையில் தள்ளாடி வருபவர்களும் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் அச்சம்

மேலும் இருள் சூழ்ந்த சாலையில் மர்ம நபர்கள் நடமாட்டமும் இருப்பதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இந்த சாலை வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பக்கவாட்டு சுவர் இன்றி காவு வாங்க காத்திருக்கும் தரைப்பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைத்தும், குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தெரு மின் விளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com