நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு


நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 6 May 2025 12:26 PM IST (Updated: 6 May 2025 12:43 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.

இதுகுறித்து பார்த்திபன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அடுத்த விசாரணைக்கு மா.சுப்பிரமணியன், காஞ்சனா ஆகியோர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் இன்றும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 23-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருவரும் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் இல்லாமலேயே வழக்கின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

1 More update

Next Story