

சென்னை,
மதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடிக்கடி அளவீடு செய்ய வேண்டும் என பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் தொந்தரவு செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தற்போதைய காலத்தில் நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி நில அளவீடு பணிகளை மேற்கொள்ள முடிகிறது. நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2500 பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அப்பணியை மேற்கொள்ள வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு காலத்தில் தமிழகம் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்ததாகவும், ஊழல் அதிகாரிகளால் அந்த பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மனுதாரரின் நிலத்தை நியாயமான நில அளவையர் ஒருவரை நியமித்து அளவீடு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டுள்ளார்.