

சென்னை,
மராட்டிய மாநிலத்தில் புனே - மும்பை இடையே உள்ள தாக்கூர்வாடி - மங்கி ஹில் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, தமிழகத்திற்கு இயக்கப்படும் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு இன்று (9-ந் தேதி) புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 09419) சூரத், பல்தி, ஜல்கான், மன்மாட், டவுண்ட் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதேபோல், மும்பை சி.எஸ்.எம்.டி.-ல் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு இன்று (9-ந் தேதி) புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (22159) கல்யாண், இகத்புரி, மன்மாட் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
மேலும், லோக்மான்ய திலக் முனையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று (9-ந் தேதி) இரவு 10.55 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில், லோக்மான்ய திலக் முனையம் மற்றும் புனே இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் புனேவில் இருந்து இரவு 12.20 மணிக்கு தனது பயணத்தை தொடங்கும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.