

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு தனி அரங்கு இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய தாமதமாகி வருகிறது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வசதி
ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்க கூடிய வகையில் தேவையான வசதிகளும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த அரசு ஆஸ்பத்திரியில் பொது அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கு என தனித்தனியாக இருந்தன. இவற்றில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கு கடந்த பல மாதங்களாக கொரேனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு அப்படியே இன்றளவும் உள்ளது.
இதனால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பொது அறுவை சிகிச்சை அரங்கில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு அதில் நடைபெற்று வருகிறது. ஆனால், அவசர எலும்பு அறுவை சிகிச்சைகள் யாவும் இந்த பொது அறுவை சிகிச்சை அரங்கில் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதாரணமாக ஓரிரு வார கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டிய எலும்பு அறுவை சிகிச்சை மட்டுமே பொது அறுவை அரங்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
பொது அறுவை சிகிச்சை
பொது அறுவை சிகிச்சை அரங்கில் ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கு காத்திருப்போர் அதிகஅளவில் உள்ளதால் அவர்களுக்கு செய்தது போக மீதம் உள்ள நேரங்களில் மட்டுமே எலும்பு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணம் மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவில் இல்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.
அவசர அவசியமாக மேற்கொள்ள வேண்டிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு நோயாளிகள் உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை என்றதும் பயந்து போகும் நோயாளிகளின் குடும்பத்தினரிடம் தனியார் ஆஸ்பத்திரியில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதாக கூறி அனுப்பி வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா பரவல்
இதற்காக புரோக்கர்கள் இருப்பதாகவும் அவர்கள் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அவசர எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள நிலையில் அதற்கான போதிய வார்டுகள் உள்ள நிலையில் இந்த எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கு அதற்கென மாற்றியமைக்கப்படவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடந்த பல மாதங்களாக ஏழை எளிய நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வருவதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்து வருகின்றனர்.
நடவடிக்கை
மருத்துவ கல்லூரி வந்துவிட்டது இனி மதுரை செல்ல வேண்டியதில்லை என்று எண்ணி இருந்த மக்களுக்கு இதுபோன்ற செயல் வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கினை உடனடியாக செயல்பட வைப்பதோடு, இதுநாள் வரை இந்த முறைகேடு செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.