தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு - வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்

தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு - வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர ராஜகோபாலசாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் பிற்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், பட்டதாரி ஆசிரியர் ஜெயலட்சுமி, ஏடகம் சுவடியியல் மாணவர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பொதுவாக தமிழகத்தில் அறச்சாலைகளாக சத்திரங்களும், மடங்களும் ஊர்கள் தோறும் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய நாட்களில் வழிப்போக்கர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வேளையில் அச்சத்திரங்களில் தங்கியிருந்து உணவருந்தி செல்வது வழக்கமாக இருந்தது.

அவ்வாறு செல்பவர்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியும் அங்கேயே இருந்தது. இவை தருமக்கட்டளை என்ற பெயரில் பல இடங்களில் நடைபெற்று வந்தது. யாரோ ஒருவராலோ அல்லது ஒரு சிலரோ சேர்ந்து இத்தகைய தருமகாரியத்துக்கு நிலமும், பொருளும் நிரந்தரமாக கிடைக்குமாறு வழங்கியிருந்தனர்.

இந்த சத்திரங்களின் நிர்வாகம் பற்றி கி.பி.1855-ம் ஆண்டு ஆவணம் ஒன்று சத்திரத்திற்கு வருகின்ற வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டும். இது எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க உதவும். வழிப்போக்கர், வயோதிகர், குழந்தைகள் முதலியவர்களுக்கே உணவு வழங்க வேண்டும். உழைக்காமல் வரக்கூடிய சோம்பேறிகளுக்கு இங்கே தங்கவும், உணவளிக்கவும் கூடாது என்றும் கூறுகிறது.

இதேபோன்று ஒரு அறக்கட்டளைதான் கிட்டப்பா வட்டாரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியாகும். சுமார் 14 அடி அகலமும், 2½ அடி உயரமும் கொண்ட இந்த கல்வெட்டில் 30 வரிகள் காணப்படுகின்றது. கி.பி.1889-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 தமிழ் சர்வதாரி ஆண்டு தை மாதம் 6 என குறிப்பிடப்பட்டுள்ள இந்த கல்வெட்டில் கி.பி. 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தஞ்சை கோட்டைக்குள் ராஜகோபால சாமி கோவில் வீதி அண்ணு பாட்டகர் சொல்படி நாகோ பாட்டகர் செய்த தருமச்செயலை அவருடைய தமையன் வெங்கோ பாட்டகர் எழுதி வைத்த உயில் என்று குறிப்பிடுகிறது.

துவாதசி கட்டளை தருமத்திற்காக அவருடைய வீட்டின் மேல்புறமும் அதற்காக வைக்கப்பட்டுள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ.400-ல் இருந்து கிடைக்கக்கூடிய வட்டித்தொகையை கொண்டு 10 பிராமணருக்கு அவரும், அவருடைய தமக்கை காமாட்சி அம்மாளும் அன்னம் வழங்கி தருமம் நடத்தி வருவதை குறிப்பிடுவதோடு, இவர்களுக்கு பிறகு மேற்படி தருமத்தை தமக்கை மகள் கங்காபாய் அம்மாள் நடத்தி வர வேண்டும் என்பதனையும், இதனை அனைவரும் அறியும்படியாக கல்வெட்டு வெட்டியதையும் குறிப்பிடுகின்றனர். கொடை அளித்தவர்களின் பெயர்களை காணும்போது மராட்டிய வழி வந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com