

நாட்டின் நம்பிக்கை
நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இளைஞர்கள். 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் சக்தியை, பெருமையை பறைசாற்றினார். இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று போற்றப்பட்ட மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் என்று நம்பிக்கையை விதைத்தார்.தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது, அந்த தடையை உடைத்து, ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது இளைஞர்களின் போராட்டம்
என்பது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டது. இப்படி நாட்டில் இளைஞர்கள் சக்திக்கு நிகர் எதுவும் இல்லை என்பதற்கு பல சான்றுகள் உண்டு.
பொருளாதார வசதி
இன்றைய இளைய தலைமுறையினரிடம் வேகம், விவேகம் மட்டுமின்றி அடுத்தவர்களுக்கு உதவும் ஈகை குணம், பரந்த மனமும் நிறைந்து உள்ளது. சினிமா, விளையாட்டு போன்றவற்றில் இருக்கும் ஆர்வத்தை போல் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது. இதற்காக சில இளைஞர்கள் தனித்தனி அமைப்புகளை, குழுக்களை தொடங்கி, அதன் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.அதே போன்று, சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் சில இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருக்கலாம்.
பெல்லோ சிட்டிசன்
இந்தநிலையில், இதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் தந்தி டி.வி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் இணைந்து களம் இறங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் இணைந்து பெல்லோ சிட்டிசன் (சக மனிதர்கள் மேன்மை அமைப்பு) என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் செயல்பாடு, இலக்கு, திட்டங்கள் என்னென்ன? என்பது பற்றி அருண் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கொரோனா என்ற இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இளைஞர்கள் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த திட்டத்தை முதலில் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், பெண்ணுரிமை போன்ற சமூக நல மேம்பாட்டில் அதிக அக்கறை, பொறுப்புள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கையில் பெல்லோ சிட்டிசன் தொண்டு நிறுவனம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும்.எனவே, சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்கள் www.fellowcitizen.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பெயரை பதிவு செய்வதற்கு மே 30-ந்தேதி கடைசிநாள் ஆகும். 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் மட்டும் பதிவு செய்ய தகுதி உடையவர்கள். இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. யார் வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம்.
நேர்காணல்
'பெல்லோ சிட்டிசன் இணையதளத்தில் பதிவு செய்யும் நபர்களிடம் ஆன்லைன் வழியாகவே நேர்காணல் நடைபெறும். இதில், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், மக்கள் நலன், சமுதாய நலனே பிரதானம் என்பதில் கொள்கைபிடிப்புடன் உறுதியாக இருக்கும் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு பண வசதி வழங்கப்படும். ஒருங்கிணைக்கும் திட்டத்தை எந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்படுதல் போன்ற சிறந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.