

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்படுகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில், கம்பம் நகராட்சி முகையதீன் ஆண்டவர்புரம் தொடக்கப்பள்ளி, போடியில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி, ஆண்டிப்பட்டியில் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியகுளத்தில் லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று கம்பம் நகராட்சி மொகைதீன் ஆண்டவர்புரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடந்த முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேற்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் உள்ள உணவுக்கூடம், மாணவர்கள் உணவருந்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி, கம்பம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரத ராணி ஆகியோர் உடனிருந்தனர்.