திருட்டு போன செல்போன் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்

போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல் திருட்டு போன செல்போன் குறித்து புகார் அளிக்க புதிய செயலியை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகப்படுத்தினார்.
திருட்டு போன செல்போன் குறித்து புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்
Published on

புதிய செயலி அறிமுகம்

வேலூர் மாவட்டத்தில் தொலைந்துபோன மற்றும் திருட்டுபோன செல்போன் குறித்து உடனடியாக புகார் அளிப்பதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி செல் டிராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் தொலைந்துபோன மற்றும் திருட்டு போன செல்போன்கள் குறித்து போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல் உடனடியாக புகார் அளிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருட்டு போன செல்போன்கள்

பொதுமக்கள் தங்களின் செல்போன் தொலைந்து அல்லது திருட்டு போன உடனே மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து 9486214166 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஹாய் என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். உடனடியாக அந்த எண்ணிற்கு ஒரு இணைப்பு வரும். அதனை திறந்து அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

இதையடுத்து மனுதாரரின் புகார் ஏற்றுக்கொள்ளப்படும். அதன்பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து உடனடியாக செல்போனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தொலைந்து அல்லது திருட்டு போகும் செல்போன் குறித்து மட்டுமே புகார் அளிக்க வேண்டும். இதற்காக போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. செல்போன் கண்டுபிடித்தவுடன் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு அவரின் செல்போன் வழங்கப்படும்.

இவ்வாறு டி.ஐ.ஜி. கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோட்டீஸ்வரன், பாஸ்கரன், கவுதமன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com