சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றிய கழக முன்னாள் இணைச்செயலாளர் மறைந்த இராம.சேகரனின் புதல்வர், ராம்பிரகாஷ் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இந்த படுகொலைச் சம்பவம் அப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராம்பிரகாஷின் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com