

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவி, டிக்கெட் பரிசோதகர் இடையே டிக்கெட் கேட்பதில் தொடங்கிய வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதர்கள்( டிடிஆர்) சட்ட கல்லூரி மாணவியிடம் டிக்கெட் எங்கே காட்டு என கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி, "நான் ரெயிலில் பயணம் செய்யவில்லை, உறவினரை வழியனுப்ப வந்தேன்" என்று கூறியுள்ளார். சரி பிளாட்பார்ம் டிக்கெட் எங்கே என்று கேட்டனர்.
அந்த டிக்கெட்டையும் அந்த மாணவி எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையின் போது சட்ட கல்லூரி மாணவியின் மொபைல் போனை டிக்கெட் பரிசோதகர் வாங்கி வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, "தன்னுடைய செல்போனை கொடுங்கள்" என்று கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அவர் செல்போனை கொடுக்காததால் திடீரென மாணவி, பெண் டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான கைகலப்பு மற்றும் சண்டை உருவானது. அந்த டிக்கெட் பரிசோதகருடன் இன்னொரு டிடிஆரும் உடன் இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக பயணிக்கும் டிடிஆருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.