சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலை இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கான இசைவு ஆணையையும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலையும் இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலை இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்
Published on

ஊழல் வழக்குகளில் கோர்ட்டு விசாரணை தொடங்க இசைவு ஆணைக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக உங்களிடம் நிலுவையில் உள்ளன. ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா வினியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஐகோர்ட்டின் உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அவர்கள் மீது கோர்ட்டு விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது.

மாநில அமைச்சரவையும், அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.யின் கோரிக்கையை கவர்னர் அலுவலகத்துக்கு 12.9.2022 அன்று அனுப்பி வைத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் அந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

மேலும், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் இசைவு ஆணை கோரியது. இந்த கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து, அதற்கான கடிதங்களை முறையே 12.9.2022 மற்றும் 15.5.2023 ஆகிய தேதிகளில் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் கோர்ட்டு விசாரணையை தொடங்க தேவையான இசைவு ஆணையை இதுவரை நீங்கள் வழங்கவில்லை.

ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள், உங்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் கோர்ட்டு விசாரணையை தொடங்க இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com