

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன்களில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்கள், ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம் இடம்பெற்றுள்ளன. அரசு திட்டத்தில் இதுபோல ஆளுங்கட்சியினர் சுய விளம்பரம் செய்வது, இந்திய தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த வகையான டோக்கன்களை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை டிசம்பர் 31-ந்தேதி மாலைக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் புகைப்படங்களை அச்சிடக்கூடாது என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.