

சென்னை,
அதிகமாகக் காசு கொடுப்பது தவெகதான் என தவெக கூட்டணியில் இருப்பவர்களே சொல்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தவெகவினர் அதிகளவில் பணம் கொடுப்பதாக வாக்காளர்கள் தங்களிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சமீபத்தில் கூறியிருந்தார். குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற தகவல்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தவெக தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக பணம் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தவெக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நாங்க தோற்றாலும் பரவாயில்லை, ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாசாரத்தை விஜய் மாற்றிவிட்டார் என்ற தோற்றம் இருந்தது. ஆனால், இப்போது அதிகமாகக் காசு கொடுப்பது தவெகதான் என தவெக கூட்டணியில் இருப்பவர்களே சொல்கிறார்கள். இப்படி மறுபடியும் அதே முறைகேடுகள் வரும்போது, மக்களுக்கு நல்லது செய்தால் நிலைக்கணும். இல்லை என்றால் போகத்தான் செய்யணும் என்றார்.