ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை: அன்பில் மகேஷ்

தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஆசிரியை ரமணி குத்திக்கொல்லப்பட்டார்.
ஆசிரியையை கொலை செய்தவர் மீது சட்ட நடவடிக்கை: அன்பில் மகேஷ்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி (26). இந்த நிலையில் ரமணி ஓய்வு அறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது திடீரென அறைக்குள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து போன ஆசிரியையை சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.

ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார்(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரமணியை ஒருதலையாக காதலித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன் குமார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆசிரியையை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com